கேரளா நோக்கி வேகமாகச் சென்றுகொண்டிருக்கிறது ரயில். அருகே அமர்ந்திருக்கும் இளைஞருடன் பேச்சுக் கொடுக்கிறார் ஒரு முதியவர்.
“என்னப்பா பண்ணிட்டிருக்க?”
“செஸ் ஆடிட்டிருக்கேங்க”
“நா அதக் கேக்கல. நீ என்ன தொழில் பண்ணின்டிருக்கேன்னேன்.”
“இல்லீங்க நான் முழு நேரமா செஸ் தான் ஆடின்டிருக்கேன். என்னோட தொழிலே அதுதாங்க”
பெரியவரின் முகத்தில் ஒரு ஆதங்கம். என்ன இந்தப் பையன் இந்தச் சின்ன வயதில் வீணாப்போகிறானே என்று. என்ன நினைத்தாரோ தெரியாது அவனுக்கு அறிவுரை சொல்ல ஆரம்பித்தார்.
“செஸ் எல்லாம் சரிவராதுப்பா. ஆனந்து மாதிரி இருந்தா அதெல்லாம் வேலைக்கு ஆவும். உனக்கு அதெல்லாம் சரிவராது. நீ வேறயேதாச்சும் தொழில் கத்துக்கோ. அதுதான் உன் வாழ்க்கைக்கு உதவாது.”
அழகான புன்சிரிப்புடன் இந்தச் சம்பவத்தை விவரிக்கிறார், இன்றைய உலகின் சதுரங்க வாகையர் (சாம்பியன்) விஸ்வநாதன் ஆனந்த். “அந்தப் பெரியவர் அந்த மாதிரிச் சொன்னதும் எனக்கு மனசே வரல்ல நான்தான் ஆனந்துன்னு சொல்லிக்க” என்கிறார் அவர். தனக்குக் கிடைத்த எல்லா அங்கீகாரங்களைவிடவும் மிக உயர்வானதாக இந்த விடயத்தைப் பார்க்கிறார் ஆனந்த்.
மெக்ஸிக்கோவில் நடந்த உலக சதுரங்கப் போட்டியில் வாகைசூடியதுடன் சதுரங்க உலகின் முதல் நபராகவும் முன்னேறியுள்ளார் விஸ்வநாதன் ஆனந்த். ஒரே ஆண்டில் கிடைத்த இரட்டை வெற்றிகளின் பூரிப்பு முகத்தில் தெரிய, தான் வாங்கியுள்ள புதிய வீட்டில் எம்மைச் சந்தித்தார். அழகான பிரமிப்பூட்டும் வீடு. அண்மையில்தான் அங்கு குடிபோயிருக்கிறார்கள். தனது வெற்றி, சாதாரண வாழ்க்கை, தற்போது வசித்து வரும் ஸ்பெயின் நாட்டில் கிடைத்த அனுபவம், தன்னுடைய ரசனைகள் என்று எம்முடன் அனைத்தையும் பகிர்ந்துகொண்டார்.
உலக வாகையர் பட்டம் வென்ற பின்னர் இந்தியா திரும்பிய ஆனந்திற்கு புதுடில்லியிலும் சென்னையிலும் மிகப் பெரும் வரவேற்பு அளிக்கப்பட்டிருக்கிறது. எதிர்பார்த்திருந்ததற்கும் மேலேயே கிடைத்த வரவேற்பால் நெகிழ்ந்து போயிருக்கிறார் அவர். “விமான நிலையத்திற்கு வருவார்கள் என்பது தெரியும். ஆனாலும் இவ்வளவு பெரியளவிலான வரவேற்பை எதிர்பார்க்கவேயில்லை. டில்லியில் அவ்வளவு பேர் பின்னர் ஜனாதிபதியுடனான சந்திப்பு எல்லாத்துக்கும் மேலாக சென்னையின் கிடைத்த மிகப் பெரிய வரவேற்பு, அதிலும் நிறையக் குழந்தைகள் விமான நிலையத்திற்கே வந்திருந்தது எல்லாம் அற்புதமானவை. என்னுடைய வாழ்நாளில் என்றுமே மறக்க முடியாத அனுபவம் அது.”
“உலக சதுரங்கப் போட்டி அனுபவம் எப்படி?”
“இம்முறை எப்படியும் பட்டம் வென்றுவிட வேண்டும் என்று நினைத்திருந்தேன். இதற்காக மே மாதத்தில் ஒரு தீவிர பயிற்சி முடித்திருந்தேன். இங்கே சென்னையில்தான் அது நடத்தினேன். நிறைய நண்பர்கள் இங்கு இருக்கிறார்கள். அவர்களுடனும் இணையத்தின் மூலம் பலருடனும் ஆடி நன்றாகப் பயிற்சி செய்து கொண்டேன். எப்படியும் வென்றுவிட வேண்டும் என்பதற்காக எனது 100 வீத திறமையையும் கொட்டிவிடுவது என்று தீர்மானித்திருந்தேன்.
எப்போதும் அப்படிச் செய்து கொண்டிருக்க முடியாது. இனி ஒரு முறை அப்படிச் செய்ய முடியுமா என்று கேட்டால் அதுவும் சந்தேகம்தான். நான் நல்ல திறனில் இருந்ததால் இம்முறை எல்லாவற்றையும் கொட்டிவிடுவது என்றிருந்தேன். ஆசை இருந்தது. அது நிறைவேறியது.
ஆனால், சதுரங்க உலகில் முதிலிடம் என்பது எதிர்பார்க்காத ஒன்று. போட்டி தொடங்கும் போது நான் 15 புள்ளிகள் வரை பின்தங்கியிருந்தேன். ஒரே போட்டியில் அவற்றைத் தாண்டி முதிலிடம் என்பது நினைத்தும் பார்க்க முடியாதது. ஆனால் அது நடந்துவிட்டது. மெக்ஸிக்கோ போட்டியை வெல்வதே பெரிசுன்னு நினைச்சேன். ஆனால் முதலிடம் என்பதும் ஒரே வருடத்தில் கிடைத்தது ரொம்ப மகிழ்ச்சி.”
ஆனந்தினுடைய முதல் குரு அவரது தயார் சுசீலா விஸ்வநாதன். அவர்தான் முதன் முதலில் சதுரங்கத்தை ஆனந்திற்குப் பழக்கி விட்டவர். அது பற்றி சொல்லும் போது ஆனந்தின் முகத்தில் இளைமைக் காலம் நிலழாடுகிறது.
“என்னுடைய மூத்த சகோதரர்களுக்கு (அண்ணா மற்றும் அக்கா) சதுரங்கம் ஆடிக்கொண்டிருப்பார்கள். அதைப் பார்த்துவிட்டு எனக்கும் பழக்கி விடுங்கள் என்று அம்மாவிடம் போய்க் கேட்டேன். சின்னப் பையனாக இருந்தாலும் அம்மா சொல்லிக் கொடுத்ததும் உடனே பிடித்துக்கொண்டேன். அதனால இவனுக்கு நல்லா ஆட வருங்கிறது அம்மாக்குப் புரிஞ்சுது. நிறைய செஸ் புத்தகங்களெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. ரஷ்ய நிலையத்தில் இருந்த 'செஸ் கிளப்'பில சேர்த்து விட்டாங்க.
ஒரு முறை பிலிப்பைன்ஸ் தலைநகர் மணிலா போயிருந்தப்ப அங்க தொலைக்காட்சில செஸ் போட்டி ஒண்ணு நடத்திட்டிருந்தாங்க. நிகழ்ச்சி இறுதியில ஏதாவது ஒரு சொடுக்கு மாதிரி வைப்பாங்க. அதுக்கு நாம பதில் எழுதிப் போடணும். வெல்றவங்களுக்கு ஒரு செஸ் புத்தகம் வாராவாரம் பரிசளிச்சாங்க. நான் 10 புத்தகம் வாங்கினேன். அப்புறம் என்னை அவங்க அலுவலகத்துக்குக் கூப்பிட்டாங்க. பெரிய செஸ் புத்தகம் ஒண்ணு குடுத்தாங்க. ஆனா, இதோட நிறுத்திக்கோ, இனிமே போட்டில கலந்துக்காத, நிறைய நீ ஜெயிச்சுட்டேன்னாங்க. அப்பெல்லாம் நான் வெளியே எங்காவது போயிட்டா அம்மா அந்தத் தொலைக்காட்சியப் பாத்து அதில செஸ் பத்தி என்னென்ன சொல்லறாங்களோ அதயெல்லாம் குறிப்பெடுத்து வச்சு நான் வந்ததும் தருவாங்க. அன்னைக்கின்னு இல்ல இன்னிக்கு வரைக்கும் என்னோட அப்பாவும் அம்மாவும் எனக்கு நிறைய ஊக்கம் தந்துகிட்டேதான் இருக்காங்க.
எனக்குத் திருமணம் ஆனப்போ என்னோட நண்பர்கள் எல்லாம், ‘இனி உன்னோட திறமை கொஞ்சம் கொஞ்சமா மழுங்கிடுன்னு’ சொன்னாங்க. ஆனா அதுக்குப் பிறகுதான் நான் உலக வாகையர் பட்டம் வென்றிருக்கிறேன். என் மனைவி எனக்கு முழுக்க முழுக்க துணையா இருக்காங்க.”
விஸ்வநாதன் ஆனந்த் இரண்டு தடவை சதுரங்க உலக வாகையர் பட்டம் வென்றிருக்கிறார். 2000ஆம் ஆண்டில் முதல் தடவையாக அவர் அதனை வென்றார். இப்போது இரண்டாவது தடவையாக வென்றிருக்கிறார். இந்த வெற்றிகள் இந்தியாவில் சதுரங்க ஆட்டம் பிரபலமடைவதற்கு, குறிப்பாகச் சிறுவர்களிடம் பிரபலமடைவதற்கு ஏதுவாக இருக்கின்றது. அவரது கையெழுத்தைப் பெறுவதற்காக நிறையச் சிறுவர்கள் அவரது அப்பாவிடம் தமது பயிற்சிப் புத்தகங்களை நாம் அங்கு இருக்கும் போதே கொடுத்துச் சென்றார்கள். அந்தளவிற்கு அவர்களுக்கு ஆனந்த் ஒரு தூண்டியாக இருக்கிறார். அப்படி இருப்பது எப்படி இருக்கிறது ஆனந்திற்கு?
“நான் செஸ் ஆட வந்தப்போ பொபி பிஷர், மைக்கல் டாட் எல்லாம் எனக்குத் தூண்டியாக இருந்தாங்க. இப்போ சிறுவர்களுக்கு நான் அந்த மாதிரி இருக்கிறேன்னு நினைக்கும் போது ரொம்ப சந்தோஷமா இருக்கு. இந்தியாவில இப்ப செஸ் நல்ல முன்னேற்றம் கண்டிருக்கு. ஆனா இதுபோதாது இன்னும் நிறைய வளரணும்.”
சதுரங்க ஆட்டத்திற்காக ஆனந்த் உலகம் முழுவதும் சுற்றித் திரிய வேண்டியிருக்கிறது. அதிகமான ஆட்டங்கள் ஐரோப்பிய நாடுகளிலேயே இடம்பெறுவதால் இந்தியாவில் இருந்து அங்கே அடிக்கடி சென்று வருவது அவருக்குச் சிரமமாக இருக்கிறது. இதனால் சுவிஸிலேயே ஒரு வீடு வாங்கி கடந்த சில வருடங்களாக அவர் அங்கேதான் தங்கியிருக்கிறார். "ஆனா, எப்பிடியும் வருடத்தில இரண்டு தடவையாவது இந்தியா வந்திடுவேன். இப்போ புது வீடு வாங்கியிருக்கிறதால இன்னும் நிறைய நேரம் இங்க இருக்க முடியுன்னு நினைக்கிறேன். முந்தியப் போல இல்ல, இப்ப இணையம் மூலமாவே செஸ் பயிற்சிகள்ள விளையாட முடியும். அதுக்காக ஐரோப்பா போகணுன்னு அவசியமெதுவுமில்ல." என்கிறார் புன்சிரிப்புடன்.
"சுவிஸ் எனக்கு பிரச்சினையா இருக்கவேயில்ல. போனதுமே நிறைய நண்பர்கள் கிடைச்சாங்க. இரண்டு வருசத்துக்குப் பிறகுதான் முதல் நண்பனயே கண்டேன் என்கிற மாதிரியான அனுபவங்கள் எதுவும் எனக்குக் கிடையாது. அங்க என்னால இயல்பாவே இருக்க பழக முடிஞ்சுது. ஸ்பானிஷ் கூட நல்லாவே பேசுவேன்.”
இந்த அழகிய செஸ் மகனுக்கு இசை பிடிக்கும். 'அஸ்ரோலஜி' ரொம்ப ரொம்பப் பிடிக்கும். ராத்திரி நேரம் கிடைத்தால் வெளியே வந்து அரை மணி நேரம் நட்சத்திரங்களைப் பார்த்துட்டே இருக்கிறது அவருக்கு ரொம்பப் பிடித்த பொழுது போக்கு. நடனம் தெரியும். கொஞ்சம் சமையல் செய்யவும் பிடிக்கம். ஆனா ஒரேயொரு பிரச்சினை, சமையல் குறிப்புக்களில் எதைச் சொல்கிறார்களோ அதை அப்படியே பின்பற்றுவதுதான்.
இன்னும் நாலைந்து வருடங்களுக்குள் சதுரங்கத்தை ஒலிம்பிக் போட்டிகளில் ஒன்றாகச் சேர்த்து விட்டார்களானால் அதில் கலந்து கொண்டு இந்தியாவிற்குத் தங்கம் வென்று தருவதற்கு ஆர்வமாக இருக்கிறார் ஆனந்த். "நிச்சயம் வெல்லான்னு சொல்ல முடியாது. அனா முயற்சி செய்யலாம்" என்னும் அவரது கனவு விரைவில் நனவாகட்டும்.
நினைச்சே பார்க்கல...(அம்மாவின் பகிர்வு)
அவன் சாதாரண குழந்தையாத்தான் இருந்தான். அவனுக்கு செஸ் கத்துக்கொடுத்தப்போ இந்த மாதிரி பெரிய பெரிய பட்டங்கள் எல்லாம் வெல்லுவான்னு நான் நினைச்சும் பார்த்ததில்ல. ஆர்வமா இருந்தான் அதனால கத்துக்கொடுத்தேன். சீக்கிரம் கத்துண்டான். பின்ன அதிலயே ஊக்குவித்தோம்.
மத்தக் குழந்தைகளுக்கும் அவனுக்கும் 11 வயது வித்தியாசம். அதனால் எல்லாரும் அவன்ல ரொம்பப் பாசமாவும் செல்லமாவும்தான் இருப்போம். அவனோட எல்லா வளர்ச்சியையும் அருகில இருந்து கவனிச்சுக்கவும் முடிஞ்சுது. அவன் முதல் தடவை உலக வாகையர் பட்டம் பெற்றப்போ, மற்றவா விட்ட பிழைகள் வேறு சூழ்நிலைகளால அந்த வெற்றி அமைஞ்சதாக்கூடக் கருதிக்கலாம். ஆனா இரண்டாவது தடவை வென்றபோது அது அவனோட திறமையால மட்டும்தாங்கிறது ஏற்றுக்கத்தான் வேணும்.
எத்தின பட்டம் வாங்கினாலும் இன்னிக்கும் என் மகனாதான் இருக்கான். கொஞ்சம்கூட மாறல. இருந்தாலும் சதுரங்க உலகின் முதல் மகன் என்ற வகையில அவனுக்கு இப்ப பொறுப்புக்கள் கூடியிருக்கிறதாதான் நான் நினைக்கிறேன்.
ஆனந்த் ஓர் அபூர்வம்!
(மனைவியின் குழைவு)
மெக்ஸிக்கோ போட்டியப்போ ஆனந்த் ஆரம்பத்திலேயே ரொம்ப வேகமா ஆடி ஜெயிச்சார். அதனால அவர் ரொம்ப நல்ல திறனோட இருக்கிறார்ங்கிறது தெரிஞ்சுடுத்து. இந்த முறை பட்டம் வென்றிடுவார்ங்கிற நம்பிக்கையும் இருந்தது. ஆனாலும் இறுதி ஆட்டத்தப்போ வழமை மாதிரி இல்லாம ரொம்பக் கவனமா ஆடுங்க, நல்லா யோசிச்சு ஒவ்வொரு நகர்வையும் பண்ணுங்கன்னு நாங்கெல்லாம் யோசனை கூறினோம். ஆனா இறுதி ஆட்டத்தப்போவும் ஆனந்த் வழக்கம்போல வேகமாத்தான் ஆடினார். அவர் ஆடிற வேகத்தப் பாத்து எங்களுக்கெல்லாம் ஒரே பதற்றம். ஏன்னா ஏதாவது ஒரு நகர்வு தப்பானாக்கூட அவ்வளவு நாளும் பட்ட கஷ்டங்களும் வீணாயிடுமே!
ஆனாக் கடைசில ஆனந்த் வென்றிட்டார். அவரோட அந்த வேகமான நகர்வுகள்தான் சில வேளைகளில வெற்றியைத் தேடிக் கொடுத்திருக்குமோன்னு இப்ப தோணுது. இருந்தாலும் அப்ப ரொம்பப் பதற்றமாதான் இருந்தது.
ஆனந்த் ரொம்ப அமைதி, நல்ல குணம். பழகிறத்துக்கு ரொம்ப இனிமையானவர். அவர் அப்படி இருக்கிறதாலதான் வெற்றியாளராவும் இருக்காறா அல்லது வெற்றியாளரா இருக்கிறதாலதான் அப்படி இருக்காறாங்கறது தெரியலை. என்னோட கணவர்ங்கிறத்துக்காகச் சொல்லல உண்மையிலேயே இப்படிப்பட்ட மனிதர்களப் பாக்கிறது ரொம்ப அபூர்வம். ஆனந்த் அப்படிப்பட்ட ஒருவர்.