Sunday, March 2, 2008

ரயிலோரக் கதை - 1

அந்தப் பையன் தலையை வலதும் இடதுமாக தீவிரமாக ஆட்டி தனது தாயுடன் சண்டையிட்டுக் கொண்டிருந்தான். பார்ப்பதற்கு சுவாரஸியமாகவும் வேடிக்கையாகவும் இருந்தது. அவனது மூடிய வலது கையில் இருந்த ரூபா நோட்டை தாய் பறித்து விடுவாளோ என்ற பயத்தில் விரல்களுக்கு இடையில் இறுக்கப் பற்றிப் பிடித்திருந்தான். சாதாரணமாக நின்றுகொண்டிருந்தாள் தாய். ஆனாலும் பையனின் கையிலிருந்த காசைக் கேட்டுக்கொண்டிருந்தாள். மென்மையான அணுகுமுறைதான் தெரிந்தது. ஆனால், அவன் அந்தக் காசை தன்னிடம் தந்துவிடவேண்டும் என்ற ஆவல் தெரிந்தது.கையில் வைத்திருந்த குழந்தையுடன் கந்தல் உடையில் இருந்தாள். இளம் வயதுதான். 33 வயது முதல் 35 வயதுக்குள்தான் இருக்கும். மோசம் என்று சொல்லிவிட முடியாதபடிக்கு அழகாக இருந்தாள். ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தில் அவள் தன் இரு குழந்தைகளுடனும் வந்து ஏறினாள். அவள் பின்னாலேயே இழுபட்டுக் கொண்டு வந்த அந்தச் சின்னப் பையன்தான் இவனது கவனத்தை முதலில் கவர்ந்தான். துறுதுறு என்றிருந்தான். நன்கு பராமரிக்கப்படாததால் ஏற்பட்ட ஒருவித அழுக்கு அவன் மீது படிந்திருந்தது. ஆனால் அதுவும் கூட அவனுக்கு இயல்பான அழகை வழங்கியது.
ரயிலின் வாசலில் இருந்த கூட்டம் சற்றே ஒதுங்கி அவர்களுக்கு வழிவிட்டது. இவனும்கூட அங்கேதான் நின்றிருந்தான். அவர்கள் பெட்டியின் மறுபக்க வாசல் வழியாக ஏறியிருப்பார்கள் போலும். பெட்டியின் நடுப்பாதை வழியே ஊடறுத்துத்தான் இவன் நின்றிருந்த வாசல் பகுதியை நெருங்கினார்கள். தாயின் பின்னாலேயே வந்த சிறுவன் ஒரு தடவை இவனை நிமிர்ந்து பார்த்தான். அந்தப் பார்வையில் ஒரு வித ஏக்கமும் அலட்சியமும் தெரிந்தது. இவனுக்கு எப்போதுமே சிறுவர்கள் மீது விருப்பு இருந்தது. இயல்பாகவே அந்தச் சிறுவனில் கவனம் குவிந்தது. மனது சிந்தனைகளைத் தட்டிவிட்டது.
''இவனுக்குப் பள்ளி செல்லும் வயது வந்திருக்குமா? வறுமை அவன் கல்வி வாய்ப்பைத் தவிர்த்து விட்டதோ? இப்படியே போனால் எதிர்காலத்தில் இவன் என்ன ஆவான்?'' எப்போதும் போலத்தான் இப்போதும் ஒருவித இடதுசாரிப் போக்கில் சிந்தித்தான். ஆனால் ஒருபோதும் அதற்குமேல் அவன் ஒன்றுமே செய்தது இல்லை. இப்போதும் எதையும் செய்து கிழித்தவிடப் போவதில்லை. ஆனாலும் வந்த சிந்தனையைத் தவிர்க்க விரும்பாதவனாக இருந்தவனை அந்தத் தாயின் செய்கைகள் கவர்ந்தன. அவள் வாசலின் நடுப் பகுதியில் கீழே குந்தி அமர்ந்தாள். கூட்டம் இப்போதும் சற்று ஒதுங்கி இடம்விட்டது. ஆனால் அவளைக் கவனத்தில் எடுத்துக்கொள்ளவே இல்லை.
அவர்களுக்கு இது பழக்கமாகிவிட்ட ஒன்று போலிருக்கிறது. தங்கள் பயணத்தின் ஒரு அங்கமாக இதனை அவர்கள் எடுத்துக்கொண்டார்கள் போன்றிருந்தது அவனுக்கு. ஆனால் அவனுக்கு இது புதிது. இந்த ரயில் பயணங்களே புதிதானவைதான். இப்போதுதான் இரண்டாவது தடவையாக அவன் இந்த ரயிலில் பயணிக்கிறான். அதனாலோ என்னவோ இந்த விடயம் அவனது கவனத்தை வெகுவாகவே கவர்ந்தது. அந்தச் சிறுவனின் துடுக்குத் தனமும் அழகும் கூட அதற்குக் காரணங்களாக இருக்கலாம். தனது சிந்தனைகளுக்குப் பின்னர் அந்தச் சிறுவனுக்கு ஐந்து வயதுகூட நிரம்பியிருக்காது என்ற முடிவுக்கு வந்திருந்தான் அவன். அவனது சிந்தனைகளை வேறு பக்கத்திற்குத் திருப்பி விட்டது அந்த முடிவு.
தனது கைக்குழந்தையை இடுப்பில் இடுக்கியவாறே குந்தி இருந்த தாய், துணிப் பையில் இருந்து ஒரு சிறிய 'சில்வர்' கிண்ணத்தை வெளியே எடுத்தாள். கூடவே இரண்டு சிறிய தடிகளும். அவள் கையிலிருந்த குல்லாத் தொப்பி ஒன்றை அந்தச் சிறுவன் வாங்கிக் கொண்டான். அதனை அணிந்த பின்னர் தலையை அசைத்துக் கொண்டிருந்தான். அந்தச் சிறு 'சில்வர்' பாத்திரத்தில் தடிகளால் தட்டி ஒரு ரிதத்துடன் ஓசை எழுப்பிக் கொண்டிருந்தாள் தாய். உடனடியாக இந்தச் செய்கையை அவனால் புரிந்துகொள்ள முடியவில்லை. கூர்ந்து பார்த்த பின்னர்தான் சிறுவனது தலையில் இருந்த தொப்பியில் ஒரு நூலில் மிகச் சிறிய இருப்புக் குண்டு பிணைக்கப்பட்டிருந்தது தெரிந்தது.
தாயின் தாளத்திற்கு ஏற்ப அவன் தலையை அசைத்து ஒரு தாளலயத்தில் அந்த இருப்புக் குண்டை சுற்றிக்கொண்டிருந்தான். அவனது வயதிற்கு அது ஒரு சாகச நிகழ்ச்சிதான். அவனது செய்கைகள் இவனுக்கு ஆச்சரியத்தைக் கொடுத்தன. விருப்புடன் கண்வெட்டாமல் அவனது செய்கைகளையே கவனித்துக் கொண்டிருந்தான். சில நிமிடங்கள் தொப்பியை ஆட்டிக்கொண்டிருந்த சிறுவன் அதை நிறுத்திவிட்டுத் தன் தாய் எடுத்து வைத்த இரும்பு வளையம் ஒன்றை கையில் எடுத்துக்கொண்டான். அதனை கால்களுக்கு இடையில் கொடுத்து உடம்பை வளைத்து அதனுள் நுழைத்து வித்தைகள் பல காட்டினான். ரஷ்ய ஜிம்னாஸ்டிக் அழகிகள் தோற்றுவிடுவார்கள் என்று எண்ணினான். வசதிகளும் வாய்ப்பும் இருந்தால் இவனும் ஒருநாள் ஒலிம்பிக் வரை செல்லக்கூடும் என்று இவன் சிந்தித்தபோது, தனது சாகச வித்தைகளை நிறுத்தினான் சிறுவன்.
தாளம் போட்டுக்கொண்டிருந்த அந்த 'சில்வர்' கிண்ணத்தை எடுத்து சிறுவன் கையில் கொடுத்தாள் தாய். அதை ஏந்திக் கொண்டு ஒவ்வொருவரிடமும் நீட்ட ஆரம்பித்தான் அவன். இதுவரை செய்த சாகசத்துக்காக அவன் கேட்ட கூலி அது. ஆனால் பரிதாபம் இவனைத் தவிர வேறு யாருமே அந்தச் சாகசத்தைப் பார்க்கவேயில்லை. இருந்தாலும் பலர் அவனுக்குப் 'பிச்சை' போட்டார்கள். இவன் அவனுக்கு கூலி அல்லது கொடுப்பனவைக் கொடுத்தான்.
அவனுக்குப் பிச்சை போட்டவர்களில் பலர் நகரில் சர்க்கஸ் காட்சி என்றால் ஓடிப்போய் பணத்தை அள்ளிக் கொடுத்துப் பார்ப்பார்கள் என்று நினைக்கையில் இவனுக்கு எரிச்சல் வந்தது. ஆனால் பையனில் எந்த மாற்றமும் இல்லை. அவன் ஒவ்வொருவர் முன்னும் தன் கையிலிருந்த கிண்ணத்தை நீட்டிக்கொண்டிருந்தான்.
பெட்டியின் இறுதி இருக்கை வரிசையில் தந்தையுடன் ஒரு சிறுமி இருந்ததை அவன் அப்போதுதான் கவனித்தான். இந்தச் சிறுவனின் வயதேதான் இருக்கும் அவளுக்கும். அதே உயரம் அதே பருமன் எல்லாமே அவன் மாதிரியேதான். ஆனால் வசதியானவள் என்பது அவளது உடைகளிலிருந்தும் மொளுமொளுப்பிலிருந்தும் பளிச்சிசெனத் தெரிந்தது. தந்தையின் மடியில் அமர்ந்திருந்தாள். பக்கத்தில் இருந்த தாய் அவளை மெல்லத் தன் கைகளால் சுற்றி பாதுகாப்பாகப் பிடித்திருந்தாள். சிறுவன் நெருங்கி வந்தபோது தந்தையிடம் இருந்து 10 ரூபா நோட்டைப் பெற்று அவன் கிண்ணத்திற்குள் போட்டாள் அவள்.
சிறுவனின் முகத்தில் ஆயிரம் சூரியன்களின் பிரகாசம். உடனடியாகவே தாயிடம் திரும்பி வந்தான். ரூபா நோட்டை தன் கையில் எடுத்துக் கொண்டு சில்லறைகளை தாயிடம் கொடுத்தான். அவன் கையிலிருந்த நோட்டைத் தரும்படி தாய் கேட்டாள். அவன் மறுத்தான். அடம்பிடித்தான். கைகால்களை உதைத்துக்கொண்டும் தலையைப் பலமாக ஆட்டிக்கொண்டும் தன் எதிர்ப்பைத் தெரிவித்தான். ஆனால் அந்தத் தாயின் மென்மையும் அவளது கரங்களில் ஒட்டிக்கொண்டு, இங்கு நடப்பது எதுபற்றிய பிரக்ஞையும் இன்றி அமர்ந்திருந்த தங்கையும் அவனைக் கரைத்திருக்க வேண்டும். நோட்டைத் தாயிடம் கொடுத்தான். ஆனால் அவன் மனம் ஆறவேயில்லை. வாழ்க்கையில் முதல் முறை தன் உழைப்புக்குக் கிடைத்த நோட்டை தாயிடம் பறிகொடுத்துவிட்ட வேதனையில் குனிந்த தலையை ரயிலைவிட்டு வெளியே போகும் வரை அவன் நிமிர்த்தவேயில்லை.
மாம்பலம் நிலையத்தை ரயில் நெருங்கியபோது இறங்குவதற்குத் தயாராக தாய் தந்தையுடன் வந்த அந்தச் சிறுமி, சிறுவனை நெருங்கிய போது மீண்டும் ஒருமுறை ஐந்து ரூபாய் நாணயத்தைக் கொடுத்தாள். ஆனால் அவன் நிமிர்ந்தும் பார்க்கவில்லை. ரயில் பெட்டியின் சுவரிற்குள் தன் தலையைப் புதைத்துக் கொண்டிருந்தான். அவன் தாய் அந்தப் பணத்தைப் பெற்றுக் கொண்டாள். அதே நிலையத்தில் அவர்களும்கூட இறங்கிக் கொண்டார்கள்.

No comments: