பொழுது போகாமல் இணையத்தில் கிளறிக்கொண் டிருந்தேன். யாழ்ப்பாணம் பற்றி கிண்டிக்கொண்டிருந்த போது ஒரு தளம் என்னை மிகவும் கவர்ந்தது. யாழ்ப்பாணத்து மன்னர் பரம்பரையில் வந்தவர் என்று தன்னைத்தானே பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள ஒருவரது இணையத் தளம் அது. நெதர்லாந்தில் இருக்கும் ரெமீஜியஸ் கனகராஜா என்பவருக்கு உரியது அத்தளம். அவர் மன்னர் பரம்பரையின் உண்மையான வாரிசா இல்லையா என்பதெல்லாம் இங்கு என் விவாதத்திற்குரிய விடயமல்ல. எழுத்தாளர் கலாநிதி குணராசா ஒருமுறை இப்படி மன்னர் வாரிசைப் பற்றி எழுதி செமத்தியாக வாங்கிக்கட்டிக்கொண்டார் என்பது என் பழைய ஞாபகங்களில் ஒன்று. நான் சொல்ல வந்தது அதுவல்ல.
அந்த இணையத் தளம் 2003ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டிருக்கின்றது. யாழ்ப்பாண ராஜ்ஜியத்தை ஆண்ட மன்னர்களின் வாரிசாகத் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டுள்ள கனகராஜா கடந்த நான்கு ஆண்டுகளாக உலகம் முழுவதிலும் உள்ள மன்னர் குடும்பங்களுடன் குறைந்த பட்சம் எழுத்து மூலமாகவாவது தொடர்புகளைப் பேணிக் கொண்டிருக்கின்றார். யாழ்ப்பாண மன்னர் பரம்பரையின் இளவரசர் என்ற வகையில் அந்தத் தொடர்புகள் பேணப்படுகின்றன என்பதை அவரது இணையத் போடப்பட்டுள்ள இணைப்புகளில் இருந்து தெரிந்துகொள்ள முடிகிறது. யாழ்ப்பாண இராஜ்ஜிய வரலாறு மன்னர் பரம்பரையினர் படங்கள் (பார்த்தால் நடுத்தர வர்க்க குடும்பத்தைச் சேர்தவர்கள் என்பதற்கு மேல் மதிக்க முடியாதுள்ளது) என்று பல விடயங்கள் அதில் காணக்கிடைக்கின்றது.
ஆனால் எந்த மக்களுக்கு மன்னராக இருந்தவர்களின் வாரிசு என்று தன்னைக் கூறிக்கொள்கிராறோ அவர்கள் பற்றி சிஞ்சித்தும் கவலைப்பட்டதற்கான ஆதாரம் எதுவும் அந்த இணையத்தில் இல்லை. தனிநாட்டுக்கான போராட்டம் ஒன்று நடந்துகொண்டிருக்கும்போது இழந்துபோன தனது ராஜ்ஜியம் பற்றிக்கூட அவர் கொஞ்சம்கூடக் கவலைப்பட்டதாகவே தெரியவில்லை. அடுத்த நாட்டு மன்னர்களின் பிறந்த நாளுக்கு வாழ்த்து அனுப்புவதிலும் இறப்புக்கு துயர் தெரிவிப்பதிலுமே தனது இளவரசர் கடமை முடிந்து விட்டதாக அவர் நினைத்து விட்டார் போலுள்ளது. (அவரது இணையம் தரும் தகவல்கள் அவ்வளவுதான்)
முன்னர் அவரது மூதாதையர்கள் (வாரிசு என்பது உண்மையாக இருந்தால்) இருந்து அரசாண்ட நல்லூர் மண்ணில் இன்று நாளாந்தம் எத்தனை உயிர்கள் 'இனந்தெரியாத துப்பாக்கிகளுக்குப்' பலியாகின்றன? சுற்றிவர எழுந்து நிற்கும் பயங்கர ஆயுதங்களுக்கு மத்தியில் அந்த மக்கள் எவ்வளவு துயரப்படுகின்றார்கள். தங்கள் இருப்பை உறுதிப்படுத்த மூச்சைக்கூட ஆயுத முனைகளின் அனுமதி பெற்றே வெளியிடவேண்டியிருக்கிறதே அது பற்றி அவர் சொட்டுக்கூடக் கவலைப்படவில்லை. இதே மக்களை அன்று வெள்ளையர்களிடம் இருந்து காப்பதற்காக யாழ்ப்பாணத்து மன்னர்கள் போராடினார்கள் என்பதாவது தெரியுமா இவருக்கு? அந்தப் பரம்பரையில் வந்திருந்தால் புரட்சியின் சிந்தனை கொஞ்சமாவது ரத்தத்தில் கலந்திருக்கவேண்டுமே? ஆனால் எதையும் காணோம்.
அவருடைய மொழியில் 'இராஜதந்திர ரீதியிலான மன்னர் உறவுகளுக்கு' அப்பால், தான் எந்த நாட்டு மக்களின் மன்னராக இருந்தவர்களின் வாரிசு என்று உரிமை கொண்டாடுகிறாறோ அவர்கள் மீது குறைந்தபட்ச அக்கறையாவது தேவை. அப்படி இல்லையாயின் உரிமை கொண்டாடும் தார்மீகம் கூட அவருக்குக் கிடையாது. முதலில் உங்கள் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளியுங்கள் அவர்கள் கஷ்டங்களில் பங்கெடுங்கள் அவர்கள் துயரங்களை பகிர்ந்துகொள்ள அவர்களுக்குக் கடிதம் எழுதுங்கள் அவர்களின் துயரங்களில் கூட இருங்கள். பின்னர் மற்றைய மன்னர்களுடன் கடிதத் தொடர்புகளைப் பேணலாம்.
யாழ்ப்பாண மன்னர் பதவி என்பது தெய்வம் கொடுத்த கொடையல்ல. அது அந்த மக்களால் கொடுக்கப்பட்ட கௌரவம். அதற்குத் தகுதியாக வேண்டுமாயின் இளவரசர் என்று (யார் கொடுத்த பட்டமோ தெரியாது) தன்னை அழைத்துக்கொள்வது மட்டும் போதாது.
Sunday, March 2, 2008
Subscribe to:
Post Comments (Atom)



No comments:
Post a Comment