கணினி (Computer) பயன்படுத்தும் எல்லோருமே எப்போதாவது ஒரு தடவை ட்ரோஜன் (Trojan), ட்ரோஜன் ஹோர்ஸ் (Trojan horse) என்ற வைரஸ் (Virus) பெயாரைப் பார்த்திருப்பீர்கள். இந்தப் பெயருக்கு என்ன அர்த்தம்? வைரஸை உருவாக்கியவரின் பெயரா? இல்லை, யாராவது அந்தப் பெயரில் வைரஸ் புரோகிறாம் (Virus programme) எழுதினார்களா?
ட்ரோஜன் ஹோர்ஸ் என்பது கிரேக்க காவியம் கணினிக்குத் தந்த பரிசு. ஹோமர் (Homer) என்ற கிரேக்க மகாகவி (நம்ம ஊர் கம்பன் போன்றவர்) படைத்த ‘இலியட்’ என்ற காவியம்தான் இந்தப் பெயருக்கு மூலம். சில வைரஸ்கள் செயல்படும் முறையை ஒத்த அவற்றுக்கு இந்தப் பெயர் சூட்டப்பட்டது.
கிரேக்கர்களுக்கும் ட்ரோய் (Tory) நகரத்தவர்களுக்கும் நடந்த மிகப் பெரிய போரின் இறுதியில் கிரேக்கர்கள் எப்படி வென்றார்கள் என்பதுதான் விசேடம். 24 காண்டங்களைக் கொண்ட அந்தக் காவியத்தை இங்கே சொல்ல முடியாது. ஆனால், ட்ரோஜன் ஹோர்ஸ் என்படும் அந்த விடயத்தை மட்டும் சொல்லாம்.
10 ஆண்டுகளாகத் தொடர்ந்த போரில் கிரேக்கர்களால் வெற்றிபெற முடியவில்லை. இறுதியில் தன்னுடைய மைத்துனனைக் கொன்றான் என்பதற்காக காவிய நாயகனான அக்கிலிஸ் (Achilles - இவனது கோபம், ஆக்ரோஷம், வீரம் இவைதான் இலியட்டின் மையக்கரு. இந்தப் போருக்காகவே இவன் பிறந்தான் என்கிறது காவியம்), ட்ரோய் நகரத்தாரின் முதன்மைத் தளபதி ஹெக்டரைக் கொன்று அவனது உடலைத் தன் தேரில் கட்டி இழுத்துச் சென்றான். மகனின் உடலைப் பெறவரும் தந்தையான ட்ரோய் மன்னர் ப்ரியம் ஹெக்டரின் அடக்கத்தையொட்டி 12 நாள் அமைதி கடைப்பிடிக்க கேட்கிறான், அக்கிலிஸ் சம்மதிக்கிறான்.
12 நாட்கள் கடந்தபோது, கடற்கரையில் முகாமிட்டிருந்த கிரேக்கப் படைகள் மாயமாகிவிட்டன. அவை இருந்த இடத்தில் மரத்தால் செய்யப்பட்ட பெரிய்ய்ய்ய்ய குதிரை ஒன்று எஞ்சி இருக்கிறது. பிளேக் நோய் வந்து கிரேக்கர்கள் மடிந்து போனதால் அவர்கள் திரும்பி விட்டார்கள் என்று ப்ரியமும் அவனது தளபதிகளும் நம்புகின்றனர். ப்ரியமின் இரண்டாவது மகனான இளவரசன் பாரிஸ் (கிரேக்கர்களின் மன்னர் மன்னனான அகமெம்னனின் சகோதரனது மனைவியும் உலகப் பேரழகியுமான ஹெலனை, விருந்துக்குப்போன இடத்தில் காதல் செய்து கடத்திக்கொண்டு வந்துவிட்டதால்தான் இந்தப் போரே ஆரம்பமாகிறது.) தடுத்தும் கேளாமல் மரக்குதிரையை கட்டி இழுத்து கோட்டைக்குள் கொண்டு செல்கின்றனர்.

அந்த பெரிய்ய்ய்ய்ய மரக்குதிரைக்குள் கிரேக்க வீரர்கள் மறைந்திருந்தனர். உண்மையில் அது கிரேக்கர்களின் திட்டம். அவர்களால் ட்ரோய் நகரக் கோட்டை மதில்களை உடைத்து உட்புகமுடியாததால் அவர்கள் இப்படி ஒரு திட்டம் தீட்டினார்கள் குதிரை கோட்டைக்குள் இழுத்து விடப்பட்ட அன்று இரவே அக்கிலிஸ் உட்பட கிரேக்க வீரர்கள் அதிலிருந்து வெளியே வந்து ட்ரோய் நகரைத் தாக்கினார்கள். அதேநேரம் மறைந்திருந்த கிரேக்கப்படைகள் கோட்டைக்கு வெளியே இருந்து தாக்கி நகரைத் தம்வசமாக்கின.
குதிரைக்குள் மறைந்திருந்து சென்று, இரவு வரும்வரை காத்திருந்து பின்னர் கிரேக்கர்கள் தாக்குதல் நடத்திய பாணியில் சில வைரஸ்களும் கணினிக்குள் மறைந்திருந்து நேரம் வரும்போது செயற்படுவதனால் அவற்றை ட்ரோஜன் ஹோர்ஸ் என்கிறார்கள்.
ராமாயணம், மகாபாரதம் போன்று மிகப் பெரிய சிறந்த காவியம் இலியட். ட்ரோய் நகரைத் தாக்க 1000க்கும் மேற்பட்ட கப்பல்களில் கிரேக்கர்கள் வந்தார்கள் என்பது உட்பட அதன் கற்பனை வளம் மிகப் பெரியது. Even Homer nods, apple of discard, Achilles’s heel போன்ற ஆங்கில மரபுத்தொடர்கள் இந்தக் காவியத்தில் இருந்துதான் பிறந்தன என்கிறார்கள். இந்தக் கதை Troy என்ற பெயரில் ஹாலிவூட் படமாகவும் ஹோமரின் இலியட் என்ற பெயரில் தமிழ் புத்தகமாகவும் வெளிவந்திருக்கிறது.



No comments:
Post a Comment