Wednesday, April 2, 2008

விட்ட தவறு, தொட்ட குறை!

இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறையை எதிர்த்து நியூயோர்க்கில் அகிம்சைப் போராட்டம் நடக்க இருக்கிறது. ஆயிரத்துக்கும் மேற்பட்ட மனித உரிமை ஆர்வலர்கள் திரளப்போகிறார்கள். அகிம்சை போதித்த புத்தனின் வாரிசுகளுக்கு, ஐ.நாவின் இலங்கை அலுவலகம் முன்புகூடி மனித உரிமை பற்றி பாடம் எடுக்கப்போகிறார்கள் அவர்கள்.

ஜனவரி மாதத்தில் இலங்கை சுதந்திர ஊடக நிலையத்திற்கு நான் சென்றிருந்தபோது, அரசுப் படைகளின் அச்சுறுத்தலுக்குப் பயந்து பாதுகாப்புத் தேடிக்கொண்டிருந்த சிங்கள ஊடகவியலாளர்களை கண்டேன். உயிரைக் காக்க அவர்கள் பதுங்கித் திரிந்தனர். அரச ஊடகமான ரூபவாகினிக் கூட்டுத்தாபனத்தின் நிர்வாகம் அண்மையில் ஓய்வுபெற்ற இராணுவ ஜெனரலின் கட்டுப்பாட்டில் விடப்பட்டிருக்கிறது. அரசு சார்புச் செய்திகளை மட்டுமே வெளியிடும் ஊடகம் அது. அமைச்சர் மேர்வின் சில்வாவுக்கும் அந்த நிறுவனத்தின் பணியாளர்களுக்கும் இடையில் ஏற்பட்ட முறுகலால் நிலைமை இந்தளவு மோசமாக்கிவிட்டது. கூட்டுத்தாபன ஊடகவியலாளர்கள் சிலர் தாக்கப்பட்டுள்ளனர். இந்த நிலைமைகளை அடுத்து இலங்கையில் ஊடக சுதந்திரம் பாதுகாக்கப்பட வேண்டும் என பல தரப்புக்களும் உரத்துக் குரல் கொடுக்கின்றன.

நீண்டகாலமாகவே இலங்கையில் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் கொலை, அழுத்தம், அச்சுறுத்தல், அடக்குமுறை என்று துன்பப்பட்டுள்ளனர்; இன்னும் படுகின்றனர். தமிழ் ஊடக நிறுவனங்கள் தாக்கப்பட்டுள்ளன, குண்டு வீசித் தகர்க்கப்பட்டுள்ளன, அச்சுப் பொருட்கள் கிடைக்காமல் மூடப்பட்டுள்ளன, குண்டு வைத்தும் தகர்க்கப்பட்டுள்ளன. தசாப்த காலமாக இவை நீடித்து வரும் துன்பம் இது. இவை தொடர்பில் பெருமளவிலான குற்றச்சாட்டுக்கள் அரசுப் படைகளுக்கு எதிரானவை.

நோர்வே நாட்டின் அனுசரணையுடனான சமாதான முயற்சி 2005 தளம்ப ஆரம்பித்ததும் தமிழ்ப் பத்திரிகையாளர்கள் மீதான அடக்குமுறைகள் இன்னும் இன்னும் வளர்ந்தன. யாழ்ப்பாண ‘உதயன்’ நாளிதழின் இரண்டு ஊழியர்கள் 2006 மே மாதத்தில் சுட்டுக்கொல்லப்பட்டனர். அந்த நாழிதளின் சகோதரப் பத்திரிகையான ‘சுடர்ஒளி’ செய்தியாளர் சுகிர்தராஜன் திருகோணமலையில் கொல்லப்பட்டார். அதன் பின்னர் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த மற்றொரு செய்தியாளர் காணாமல்போனார். புத்திரிகைத்துறை படித்துக்கொண்டு பகுதிநேரச் செய்தியாளராக இருந்த ஒருவர் கொல்லப்பட்டார். மிக அண்மையில் தமிழ்ப் பத்திரிகையாளர் திஸநாயகத்தை கைது செய்த பொலீஸார், நீதிமன்றில் அவர் மீது எந்தவிதக் குற்றசாட்டுக்களும் தாக்கல் செய்யாமல் தடுத்து வைத்துள்ளனர்.

தொடரும் இத்தகைய அச்சுறுத்தல்களால் பல தமிழ்ப் பத்திரிகையாளர் இலங்கையை விட்டு வெளியேறிவிட்டனர். ஏனையவர்கள் பணியைவிட்டு ஒதுங்கிவிட்டனர். உதயன் பத்திரிகையின் பிரதான செய்தியாளர் ஞா.குகநாதன் கடந்த ஒன்றரை வருடங்களாக அலுவலகத்தை விட்டு வெளியே எங்கும் செல்லாமல், வீட்டுக் காவலில் இருப்பது போன்று வாழ்ந்து வருகிறார். உயிர் அச்சுறுத்தல் காரணம்.

தமிழ்ப் பத்திரிகையாளர்கள் ஒடுக்கப்பட்ட இத்தகைய நிலைக்கு எதிராக, சிங்களப் பத்திரிகையாளர்கள் ஒருபோதும் ஒருமித்துக் குரல் கொடுத்ததில்லை. தாங்கள் தாக்கப்படுவதற்கு முன்னர், நாடுமுழுவதும் பத்திரிகை சுதந்திரத்தைப் பாதுக்க அவர்கள் தவறிவிட்டனர். ஒரு சில ஊடக நிறுவனங்கள் மட்டும் அவ்வப்போது குரல் கொடுத்தன. அவையும் கண்டனத்திற்கு ஆளாகவேண்டி இருந்தது. ஏனைய அனைத்தும், முக்கியமாக சிங்கள ஊடகங்கள் இந்த விடயத்தைக் கண்டுகொள்ளவே இல்லை. அதனால், தமிழ்ப் பத்திரிகையாளர்களில் ஆரம்பித்த சிங்கள அரசுகள் தற்போது தமது பத்திரிகையாளர்களையே பலி கேட்கும் நிலைக்கு முன்னேறிவிட்டன. அதன் பின்னரே சிங்களப் பத்திரிகையாளர்கள் கொஞ்சம் விழித்திருக்கிறார்கள். எதிர்ப்புக் குரல்களை சர்வதேச மட்டம் வரைக்கும் வலுவாகியிருக்கிறார்கள்.

ஆரம்பத்தில், தமிழ் ஊடகங்கள் நசுக்கப்பட்டபோதே, ஒன்றித்துக் குரல் கொடுத்து ஊடக சுதந்திரத்தைக் காத்திருந்தால் இன்றைய நிலையைத் தவிர்த்திருக்கலாம். அன்று பாதிக்கப்பட்டவர்கள் தமிழர்கள்தானே என்று நினைத்ததன் வினையை இன்று அறுவடை செய்ய வேண்டியவர்களாகி விட்டனர் சிங்களப் பத்திரிகையாளர்கள். அரும்பும் போதே முளையில் கிள்ளி எறியாமல் ஆலமரமான பின்னர் அறுத்தெறிய முயற்சிப்பதை என்னவென்பது? நியூயோர்க்கில் இருந்து கத்தினால் நிலைமை மாறிவிடுமா? மாறிவிடும் என்று நம்புவோம்.

இலங்கை அரசுக்கு எதிராக நியூயோர்க்கில் ஆர்ப்பாட்டம்

(நியூயோர்க்) இலங்கையில் பத்திரிகையாளர்களுக்கு எதிராக நடக்கும் அடக்குமுறைகளை எதிர்த்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மனிதஉரிமை ஆர்வலர்கள் நிய+யோர்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபடவுள்ளனர். ஏப்ரல் 11ஆம் திகதி மாலை 4.25 – 5.00 மணிக்கு இந்தப் போராட்டம் இடம்பெறும். ஆனைத்துலக மன்னிப்புச் சபையைச் சேர்ந்த உறுப்பினர்கள், பெரும்பாலானவர்கள் மாணவர்கள், 10 நாடுகளில் இருந்து வந்து இந்த ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொள்கின்றனர். ஐ.நா. அலுவலகக் கட்டடத்திற்கு முன்பாக இந்தப் போராட்டம் இடம்பெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

2006ஆம் ஆண்டு சுட்டுக்கொல்லப்பட்ட, ‘சுடர்ஒளி’ நாழிதளின் பத்திரிகையாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் கொலைக்குப் பொறுப்பானவர்களைக் கண்டுபிடிக்கும்படி இலங்கை அரசாங்கதிடம் இந்தப் போராட்டத்தின்போது கோரிக்கை முன்வைக்கப்படும். 2006ஆம் ஆண்டில் இருந்து இதுவரையில் குறைந்தது 10 ஊடகப் பணியாளர்கள் இலங்கையில் கொல்லப்பட்டுள்ளனர். இதனை அடுத்தே இந்தப் போராட்டம் ஒழுங்குசெய்யப்பட்டுள்ளது.

நியூயோர்க்கில் உள்ள தமிழ் மனிதஉரிமை ஆர்வலர்களும் இதில் பங்கெடுத்துக்கொண்டு தமது கண்டனத்தை வெளிப்படுத்தலாம்.